×

அவசர சட்ட விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு தாக்கரே ஆதரவு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் அவசர சட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதாக தாக்கரே தெரிவித்துள்ளார். டெல்லியில் அரசு நிர்வாக சேவை தொடர்பாக டெல்லி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்ற அதிரடி தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துபோக செய்யும் வகையில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான அவசர சட்டத்தை கடந்த வாரம் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இதனால், முதல்வர் தன் விருப்படி முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை மாநிலங்களவையில் முறியடிக்க கெஜ்ரிவால் அரசியல் கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறார். முதலில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து ஆதரவு கோரிய அவர், அடுத்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்தித்தார். இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் பேட்டியளித்த கெஜ்ரிவால், “நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாக உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். மேலும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தால் 2024 ல் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது,’’ என்று தெரிவித்தார்.

The post அவசர சட்ட விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு தாக்கரே ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Takare ,Kejriwal ,New Delhi ,Union Government ,Government Administrative Service ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...